Sunday 18 December 2011

தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?


alt

மாஸ்கோ : இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி அதற்கு சட்டரீதியாக ரஷ்யாவில் தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிகிறது.  சைபீரியாவின் தோம்ஸ்க் நகரத்தின் அதிகாரிகள் பகவத் கீதையை தடை செய்ய கோரியுள்ள வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் திங்கள் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா வருகை தந்து கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ள நிலையில் இத்தீர்ப்பு வழங்கப்பட உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கிருஷ்ணாவை நினைவு கூறுவதற்கான சர்வதேச குழு (ISKCON) எனும் அமைப்பின் நிறுவனரான பக்திவேதாந்த சுவாமி பிரபுதா என்பவர் ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்துள்ள பகவத் கீதையை தடை செய்ய கோரியே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமூகங்களுக்கு மத்தியில் பேதத்தையும் வேற்றுமையையும் ஏற்படுத்தும் தீவிர போக்கு கொண்ட பகவத் கீதையை தடை செய்ய வேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டுள்ளது. அது பிற மதங்கள் மேல் வெறுப்புணர்வு ஏற்படும் வகையில் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று மாஸ்கோவில் உள்ள 15,000 இந்தியர்கள் வாயிலாக கேட்டு கொண்டதாகவும் இஸ்கான் கூறியுள்ளது.

பகவத்கீதையை ஆய்வு செய்யுமாறு டோம்ஸ்க் மாநில பல்கலைகழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் அப்பல்கலைகழகம் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்து அவ்வறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பெயர் வெளியிட விரும்பா தூதரக அதிகாரிகள் ஏற்கனவே பிரதமர் உள்ளிட்ட உயர் மட்ட அளவில் இப்பிரச்னை ரஷ்ய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் இப்பிரச்னை குறித்து தாங்கள் கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.